Thursday, April 28, 2016

தமிழ் நாட்டின் சாதி சார் அரசியல் - சில குறிப்புகள்

தமிழ்  நாட்டின் சாதி சார் அரசியல் - சில குறிப்புகள் - கல்யாணராமன் ( https://twitter.com/kalyanasc/ )

இவ்விடுகை ராஜன் குறை தமிழ்நாட்டில் சாதிசார் அரசியல் பற்றி எழுதியிருக்கும் முகநூல் குறிப்பை   முன்வைத்து எழுதப்பட்டது.  அதை வாசித்து விட்டு கல்யாணராமன் அவர்களின் (எதிர்வினைக்)கட்டுரையை வாசிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

சுருக்கமாக ராஜன் குறையின் வாதம் இதுதான். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வெற்றியென்பது பல சாதிச் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதிலேயே இருக்கிறது. எந்த சாதியைச் சேர்ந்த வாக்கு வங்கியும் தன்னளவிலேயே வெற்றி பெற்றுத்தரும் அளவுக்கு எண்ணிக்கை பலம் வாய்ந்ததாக இருப்பதில்லை. எனவே, வெளிப்படையான சாதிக் கட்சிகளைத் தவிர, மற்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் - குறிப்பாக, இரு பெரும் திராவிடக் கட்சிகள் - சாதி வேறுபாடற்ற மக்கள் தொகையின் ஆதரவைப் பெற்றுத்தான் ஆட்சியைப் பிடிக்கிறார்கள், நடத்துகிறார்கள்; எனவே ஆதிக்க சாதிகளின் கூட்டதிகாரம் என்று சொல்வதெல்லாம் மாயை, குழப்பத்தில் எழுந்த மனப்பதிவு என்று கதைக்கிறார்!

இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பல சாதிச் சமூகத்தினரின் ஆதரவின்றி தொகுதி மட்டத்திலோ மாநில மட்டத்திலோ ஆட்சியைப் பிடிக்கமுடியாது என்பது உண்மைதான். Universal adult franchise-ஐ அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட தேர்தல் சனநாயக ஆட்சி முறையில் இது வேறெப்படியும் இருக்கமுடியாது. உள்ளபடியே, மக்கட்தொகையில் 20 விழுக்காடாக இருக்கும் பட்டியல் சாதியினரின் (SC/ST) கணிசமான ஆதரவைப் பெற்றுத்தான் திமுகவும் அதிமுகவும் ஆட்சியைக் கைப்பற்றி வந்திருக்கின்றன. ஆனால் ஆதரவை அளிப்பவர்களுக்கெல்லாம் அதிகாரத்தில் பங்கோ ஆட்சியின் பயனோ கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் உண்மை. இந்தக் கைப்புண்ணுக்கு கட்டாயமாக எந்தக் கண்ணாடியும் தேவைப்படாது.

ஒவ்வொரு திமுக/அதிமுக ஆட்சியின்போதும், அந்த சட்டமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த கணிசமான பட்டியல் சாதியைச் சேர்ந்த தனித் தொகுதி உறுப்பினர்கள் இருக்கக்கூடும். ஆனால் அவர்களுக்கு பதவியும் அதிகாரமும் கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. எனவே சாதிப் பன்மைத்துவத்திலிருந்து பெறப்படும் வாக்கு ஆதரவு, சாதி சார்ந்த புறக்கணிப்புக்கும், அதன் மறுபக்கமான ஆதிக்கசாதிக் கூட்டதிகாரத்தின் இயக்கத்துக்கும் இடையூறாக இருக்கும் என்பதே ஒரு மாயை தான். நடப்பில் அப்படியெல்லாம் கிடையாது.

அதிகாரப் பகிர்வில் பட்டியல் சாதியினருக்கு இப்படி நேர்கிறதென்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அடித்தட்டுப் பிரிவினரின் - அதாவது ஆதிக்க சாதியினரின் எண்ணிக்கைப் பெரும்பான்மை வாய்க்கப்பெறாத சிறுபான்மை வகுப்பினரின் - கதி என்ன? இவர்களுக்கு உள்ளூர் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் ஊராட்சி அதிகாரமும் சிறுசிறு ஒப்பந்தங்களும் கிடைக்க  வழியுண்டு   . நகராட்சிகளில் வார்டு கவுன்சிலர் பதவிகளும் அதனால் பெறக்கூடிய ”பயன்களும்” கிடைக்கப் பெறலாம். இவற்றைவிட மேலான மட்டங்களுக்கு இவ்வகுப்பினர் சுலபமாக வந்துவிடமுடியாது. இங்குதான் தொகுதிவாரி எண்ணிக்கைப் பெரும்பான்மை (மொத்த மக்கள்தொகையில் 30 விழுக்காடுகளுக்கும் மேலான எண்ணிக்கை பலம்) தேர்தல் களத்தில் கொங்கு வேளாள கவுண்டர், முக்குலத்தோர், நாடார், வன்னியர்,  போன்ற வகுப்பினரின் “இயல்பான” ஆதிக்கத்துக்கு வழிவகுக்கிறது.

மேலும், ஆட்சி அதிகாரத்தை நுகர்ந்து சேர்த்திருக்கும் செல்வமும் சமூகச் செல்வாக்கும் இவர்களுடைய தொடர்ந்த ஆதிக்கத்துக்கு உறுதுணையாக இருக்கின்றன. (இவற்றில் கொங்கு வேளாள கவுண்டர் மற்றும் முக்குலத்தோர் போன்றவை எண்ணிக்கை பலத்தையும் அதிகாரத்தையும் குறிவைத்து, தங்களுக்குள் கொள்வினை கொடுப்பினை இல்லாத தனிச் சாதிகளை இணைப்பதன் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட சாதித் தொகுதிகள் தாம்.) தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சாதிவாரிப் பகுப்பிலும் அமைச்சர்களின் சாதிவாரிப் பகுப்பிலும் இந்தக் கூட்டதிகாரத்தை தெளிவாகக் காணமுடியும். மற்றபடி அரசின் ஆதரவினால் நேரடியாக உருவாக்கப்படும் கல்வி வணிகத்திலும் சாராய ஆலை உரிமங்களிலும், மணல் கொள்ளை நிறுவனங்களிலும், ஏன் ஊடகத்துறையிலும் கூட இந்த வகுப்பினரின் ஆதிக்கத்தை கண்டுகொள்ள முடியும்.

இட ஒதுக்கீடும் அவ்வாறே இந்த ஆதிக்க சாதியினரின் நன்மைக்காகவே எந்த மாற்றமுமின்றி தொடரப்படுகிறது. 1970-இலேயே தங்கள் மக்கட்தொகை விகிதத்துக்கு மிக அதிகமாகவே கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளைப் பெற்றவர்களாக இவர்கள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறார்கள் (சட்டநாதன் கமிஷன் அறிக்கை). இருந்தும் தமிழக அரசுகள் வாய்ப்புகளின் மொத்த விகிதத்தை உயர்த்தினார்களேயன்றி இவ்வாதிக்கத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்கள் எண்ணிக்கை பலத்தால் வன்னியர்கள் போராடி ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அதிகாரப் பகிர்வையும் சமூக செல்வாக்கையும் நிறுவ முடிந்திருக்கிறது.

ஆனால் BC/MBC என்ற பட்டியலில் சிக்கித் தவிக்கும் நலிந்த, எண்ணிக்கைச் சிறுபான்மை, வகுப்பினர் இந்த எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதியினரின் பிடியிலிருந்து மீள வாய்ப்பே இல்லை என்று தான் கூறவேண்டும். இட ஒதுக்கீடு மூலம் தங்களுக்கு கிடைத்துவரும் விகிதத்துக்கு மீறிய நலன்களைப் பாதுகாத்திடவே சாதி அடிப்படையில் தரப்படும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் எந்த சாதிக்கு எந்த அளவு போய்ச் சேர்ந்திருக்கிறது என்ற கணக்கெடுப்பை உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி நடத்த மறுக்கிறது நம் ஆளும் வர்க்கம்.

கடைசியாக, இந்த அதிகார வேட்கையும், பொருளீட்டும் வெறியும் நலிந்தவர்களை அவர்களின் வாக்குகளுக்காக “சரிக்கட்டும்” தேவையும் தான் தமிழ்நாட்டு அரசை எங்கும் எதிலும் எவரிடமிருந்தும் சுரண்டும் நிறுவனமாக மாற்றி வைத்திருக்கிறது. இந்தச்  சுரண்டலும் சாதி வலிமை அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தங்களுக்கென்று ஒரு அரசியல் பிரதிநித்துவமோ தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் எண்ணிக்கை பலமோ இல்லாத பட்டியல் இனத்தவரை வெளிப்படையாகவே புறக்கணிப்பது மட்டுமன்றி எவ்வித தயக்கமுமின்றி வன்கொடுமையும் செய்யலாம் என்பதும் இந்தக் கூட்டதிகாரத்தின் தொடர் விளைவே என்றும் கூறமுடியும்..

நடப்பின் அடிப்படையில் பேச இவ்வளவு இருக்கும்போது ராஜன் குறை போன்ற மானுடவியலாளர் சித்தம் போன போக்கில் மனக்கணக்கு போடுவது வியப்பாக இருக்கிறது.

கடைசியாக இரண்டு:

இரு கட்சிகளின் (திமுக, அதிமுக) தலைமையிலான கூட்டணியே இதுவரை ஆதிக்கம் செலுத்தி வருவதால் எல்லா கட்சிகளும் ஒரு எண்ணிக்கை பெரும்பான்மை வகுப்பினரை நிறுத்துவது என்பதற்கு இடமிருந்ததில்லை. அப்படியே நிறுத்தினாலும் ஆதாயம் வேண்டும் அவ்வகுப்பினர் அதிகாரக் கட்சிகளில் ஒன்றுக்குத் தான் வாக்களிப்பார்கள். எந்த ஒரு கட்சி வென்றாலும் ஒட்டுமொத்தமாக அந்த வகுப்பினருக்கு அனுசரனையாகத்தான் நடந்து கொள்ளும் என்பதற்கு சான்றுகள் ஏராளமாக உள்ளன.

இரண்டாவதாக, திமுக/அதிமுக தலைமையில் எண்ணிக்கைச் சிறுபான்மை வகுப்பினர் இருந்து வருவது சாதிப் பன்மைத்துவத்தை சுட்டுவதன்று. மாறாக, அதிகாரப் போட்டியிலும் சாதிய ஆதிக்க மனப்பான்மையிலும் திளைத்திருக்கும் எண்ணிக்கை பெரும்பான்மை வகுப்பினரை ஒன்று திரட்டி அவர்களுக்கிடையே ஏற்படக்கூடிய நேரடியான போட்டியைத் தவிர்த்து கூட்டதிகாரத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு என்பது நாடறிந்த ஒன்று. இது ராஜன் குறைக்குத் தெரியவில்லை என்பதும் வியப்பூட்டுவதாக இருக்கிறது.

---கல்யாணராமன்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails